Friday, January 1, 2010

மீன்பிடிப் பொழுதுகள்

அமராவதி ஆறு அரவணைத்தபடிச் செல்லும் தாராபுரம்தான் (தாரைஜெய்!! ) நான் என் பள்ளிக்கூட நாட்களை நகர்த்திய ஊர்.( ஈரோடு மாவட்டத்தில் இருந்து தற்போது திருப்பூர் மாவட்டத்தோடு சேர்க்கப்பட்ட அதே தாராபுரம்தான்.)
கோவை போன்ற பெரிய ஊரோடு சேராமலும் சிறிய கிராமத்தோடு சேராமலும் இருந்த தாராபுரத்தில் என்னை மிகவும் கவர்ந்து வைத்திருந்தது, பெரிய கடைவீதிகள் மற்றும் நகர்ப்புற குடியிருப்புகள் அல்ல , அமராவதி துள்ளி ஓடும் வயலோரங்களும் ,ராஜவாய்க்காலின் கரையோரத் தோட்டங்களும் தான். (சும்மாவா எவ்வளவு இளநி, வெள்ளரிக்காய்,கரும்பு ஆட்டயப் போட்டு இருப்போம் ).ஒன்றாவது துவங்கி ஐந்தாம் வகுப்பு வரையிலான நண்பர்கள் அல்லாது ஆறாம் வகுப்பில் எனக்கு கிடைத்த நண்பர்களில் பெரும்பாலானோர் இப்பகுதியை சார்ந் தவர்களாக இருந்தது இன்னோர் காரணமாக இருக்கலாம்.
தாராபுரம் போன்ற ஊரில் எங்களுக்குக் கிடைக்கும் பரிட்சை விடுமுறை மற்றும் நீண்ட விடுமுறைகளைக் கழிக்க ஸ்நூக்கர் கிளப்களோ,மல்டிபிளக்ஸ்களோ கிடையாது . காலை நேரம் விளையாடும் பூப்பந்து மற்றும் எப்பொழுதாவது விளையாடும் கிரிக்கெட் தவிர எங்கள் பொழுது போக்கிற்காக நாங்கள் ஐவர் உருவாக்கிய நிகழ்வுதான் மீன்பிடிப் பொழுதுகள்.நான்,கணேசன்,செல்வன்,ஆறுமுகம் மற்றும் சதீஷ்தான் இந்த ஐவர் கூட்டணி. (நாங்க அஞ்சு பேர் எங்களுக்கு மீன் புடிக்க பயமே கிடையாது !!) சில சமயம் உலகநாதன் எனும் வேறொரு நண்பனும் எங்களுடன் வருவான். மீன்பிடிப் பொழுதுகள் என்றால் வெறுமனே மீன் பிடிப்பது மட்டுமல்ல, பிடித்த மீனை ஆற்றங்கரையோரமாகவே சமைப்பது, மீன் பிடிப்பதற்கு நிறைய சமயம் பிடிக்குமென்பதால் அதற்கு நடுவே நாட்டுக்கோழி குழம்புடன் சோறு சமைப்பது என பல நிகழ்வுகளின் ஒருங்கிணைவு அது !!
எங்கள் மீன்பிடிப் பொழுதுகள் விடுமுறை நாள் காலை 9 மணியளவில் துவங்கும்.இரு தினங்களுக்கு முன்பாகவே பல ப்ளான்களைப் போடுவோம். யார் யார் வீட்டில் இருந்து என்ன ஐட்டங்களை ஆட்டயப் போடறதுங்கறதுல துவங்கி (வீட்டார் அசந்த சமயம் எண்ணெய், அரிசி,தக்காளி,வெங்காயம் போன்றவற்றை பதுக்கி வைத்து விடுவோம்.) எந்த இடத்தில் மீன் பிடிக்கப்போவது, ஒவ்வொருவருடைய பணப்பங்கு எவ்வளவு என எல்லோவற்றையும் மென்பொருள் நிறுவனங்களுக்கு நிகரான நேர்த்தியுடன் திட்டமிட்டுவிடுவோம். (திட்டமிடல் மட்டும்தான், ஆனால் அவர்களைப் போலல்லாமல் திட்டமிட்டதை நாங்கள் 100% செயல்படுத்தி விடுவோம்!!.(-No additional resource ,No change management மிக முக்கியமாக No politics)
மீன் பிடிப்பதற்கு பொதுவாக, தூண்டில் போடுவது, வலை போடுவது, கைத்துளாவல், இரவு வேட்டை, ஆற்றோட்டத்தைத் தடுத்து புகையிலை கரைப்பது, (அமராவதி ஆற்றின் மீன் பிடிப்பகுதிகள் பாறைகளுக்கு நடுவே அமைந்திருப்பதால் ஆற்றோட்டத்தைத் தடுப்பது எளிது), மற்றும் வெடி போடுவது என பல வழிமுறைகள் உண்டு.
தூண்டில் போட்டு மீன் பிடிக்க எங்களுக்கு பொறுமை கிடையாது, வலை வீச வலை கிடையாது,இரவு வேட்டைக்கு வீட்டில் பொய் சொல்லி வெளியே வர முடியாது.எனவே எங்கள் வழி ஆற்றோட்டத்தைத் தடுத்து புகையிலை கரைப்பது. தடுக்கப்பட்ட தண்ணீரில் புகையிலை கரைசலை கலந்து விடுவோம்,சிறிது நேரத் திற்கு எல்லாம் மீன்கள் மயங்கி மிதக்கத்துவங்கும். அப்போது அவற்றை லபக்கிக்கொண்டு வந்து விடுவோம்.
சில சமயம் எங்களுடன் வரும் உலகநாதன், ஆறுமுகனோடு சேர்ந்து பாறைகளுக்கு நடுவே கையை விட்டே நிறைய மீன்களை பிடித்து விடுவான் .இடையிடையே மாட்டும் தண்ணீர் பாம்புகளை அவர்கள் ஒரு பொருட்டாக மதித்ததாக எனக்கு நினைவு இல்லை.
கணேசன் வீடு வாய்க்கால் கரையோரமாக இருந்ததால் சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை அவன் வீட்டில் இருந்து கிளப்பிக் கொண்டு வந்து விடுவோம்.எங்களுடைய ப‌ட்ஜெட்டுக்குத் தகுந்தாற் போல் சமையலின் தரம் அமையும். சமையலுக்கு முன் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வருவோம். அடுப்பு தயார் செய்வோம்.மழை வருவது போல் இருந்தால் புதர் ஒதுக்கி தளமமைப்போம். தலைக்குமேல் ஒழுகாமல் இருக்க பனை ஓலை கொண்டு பந்தலும் அமைப்போம். பனை நொங்கு கிடைக்கும் சமயமென்றால் கணேசனை மரத்தின் மேல் ஏற்றி விட்டுவிடுவோம். அடிப்பருத்த பனை என்றால் எங்களில் இருவர் ஒருவர் தோள் மேல் ஒருவர் ஏறி கணேசனை மரத்தில் ஏற்றி விடுவோம்.

மற்றவர்கள் மீன் பிடிக்கையில் நானும் கணேசனும் சமையல் வேலைகளை ஆரம்பித்து விடுவோம். நாங்கள் இருவரும் மீன் பிடிப்பதில் சூரப்புலிகள்!! என்பதால் இந்த ஏற்பாடு. நாங்கள் சமையலை முடிப்பதற்கும் அவர்கள் மீன் பிடித்து முடிப்பதற்கும் சரியாக இருக்கும். ஆற்றங்கரையோரம் வாழையிலை அறுத்து சமைத்ததை சாப்பிட்டுவிட்டு தண்ணீருக்குள் தாவி விடுவோம். இரண்டு மூன்று மணிநேரம் மிதந்தபிறகு மாலை நான்கு மணியளவில் பிடித்த மீன்களை அடுப்பில் பொரிக்க ஆரம்பித்து விடுவோம். ஐந்து ஆறு மணியளவில் எல்லா மீன்களையும் காலி செய்துவிட்டு வீட்டுக்கு மூட்டை யைக் கட்டிவிடுவோம்.
எல்லாமே ஒழுங்காதான் போய்ட்டு இருந்துச்சு, எங்களுக்கு அந்தப் பேராசை வரும் வரை. அஞ்சு மீனுக்கும் பத்து மீனுக்கும் புகையிலைய கரைக்கறத விட பேசாம வெடி போடலாங்கறதுதான் அந்தப் பேராசை(வெடி போட்டா குறைந்தது பத்து முதல் இருபது கிலோ மீன் கிடைக்கும் நண்பர்கள் மத்தியில் நல்ல விளம்பரம் வேறு). வெடி போடறதுன்னா நல்லா தண்ணி ஆழமா இருக்குறா இடமா பாத்து போடணும்.பொதுவா அந்த மாதிரி இடமெல்லாம் மீன் தொழில்முறையா பிடிக்கறவங்க வருடஉரிமம் வாங்கி பிடிக்கற இடம். இருந்தாலும் தெனாவெட்டா இது நம்ம இடம், எவன் என்ன பண்றான் பாத்துடலாம் அப்டீன்னு வெடி போட பொதுக்குழு கூட்டி முடிவு பண்ணீட்டோம் .மீன் பிடிக்க, மீன் பிடிக்கறவங்க மீன் வியாபாரத்திற்காகச் செல்லும் காலை பத்து மணி முதல் பனிரெண்டு மணி வரை சரியான சமயம் என முடிவு செய்தோம்.
(வெடி போடறதுன்னா என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்தப் பத்தி . வெடி போடறதுலயும் பாறாங்கல்,பப்பாளிமரத் தக்கை, மண் எல்லாம் போட்டு ஆற்றோட்டத்தைத் தடுக்க வேண்டும்.தேங்கி இருக்கும் தண்ணீரில் வெடியை பாலீதின் பேப்பரில் தண்ணீர் புகா வண்ணம் நன்றாகக் கல்லுடன் கட்டி தண்ணீரின் ஆழத்துக்கு எறிய வேண்டும்.பாலீதின் பேப்பரின் உள்ளிருந்து நீண்டிருக்கும் திரியைப் பற்ற வைத்த உடன் வெடிக்கும் வெடியின் அதிர்வில், மீன்கள் மயங்கி மிதக்கத் துவங்கும். உடனே நீரில் குதித்து, மீன்கள் நீரின் அடியில் படியத் துவங்கும் முன் அள்ளி வந்து விட வேண்டும். )
எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஒரு சுப முகூர்த்த சுப தினத்தில் வெடி போடக் கிளம்பினோம். இம்முறை சமையல் செய்ய, எல்லாம் பெரிய பெரிய பாத்திரங்களாக எடுத்துக் கொண்டோம் .எல்லாம் எடுத்த நாங்கள் பிடிக்கும் மீனைப் போட்டு வைக்க பாத்திரம் எதுவும் எடுக்க மறந்து விட்டோம் . பத்து முதல் இருபது கிலோ மீன் வரை போடும் அளவிற்குப் பெரிய பாத்திரம் எதுவும் கிடைக்காததால் கணேசனுடைய எச்சரிக்கையையும் மீறி,அவனது வீட்டில் விதை நெல் கட்டி வைத்திருந்த சாக்கு ஒன்றை, நெல்லை தரையில் கவிழ்த்து கொட்டிவிட்டு எடுத்துக் கொண்டோம்.
அடுத்ததா வெடி போடறது. ஆற்றின் ஒருபுறம், அறுவடை முடிந்த சமயமாதலால் ஆளரவமே இல்லை. ஆனால் மறுபுறம் கரையை ஒட்டி சற்றே உட்புறமாக இருந்த செங்கல்சூளையில் வேலை செய்வோர் சிலர் இருந்தனர். ஆனால் ஆளுயரத்துக்கும் மேலாக வளர்ந்திருந்த நாணல் செடிகளின் ஊடே அவர்கள் எங்களைப் பார்ப்பது சற்றே கடினம். எங்கள் திட்டப்படி செல்வன், வெடியை பாலீதின் பேப்பரில் கட்டி திரியை பற்ற வைக்க வேண்டும். நாங்கள் நால்வரும் மூன்று திசைகளையும் கண்காணிக்க வேண்டும். அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்துவிட்டு செல்வன் திரியை பற்ற வைத்தவுடன் நாங்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு ஓடி ஒளிந்து கொண்டோம்.
சிறிது நேரம் எந்த சத்தமுமே இல்லை.திடீரென செல்வன் ,” ஓடுங்கடா, ஓடுங்கடா” னு சத்தம் போடறான். கல்லுடன் கட்டிப் போட்ட வெடி கயிற்றில் இருந்து பிரிந்து மேலே மிதந்ததைப் பார்த்துவிட்டு அவன் செய்த எச்சரிக்கைத்தான் அது. உடனே மேடு, பள்ளம் பார்க்காம மேல கீழ விழுந்து அடிச்சுட்டு ஓடினோம். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பயங்கர சத்தத்தோட வெடி வெடிச்சுடுச்சு. தண்ணீருக்கு மேல் வெடித்ததால் சத்தம் சும்மா காதைப் பொளந்துடுச்சு . தண்ணீருக்கு மேல் வெடித்ததால் மேல பலமா எழுந்த தண்ணியால பக்கத்து தென்னை மரத்து உச்சியில இருந்து தண்ணி சொட்டுது. அவ்வளவு உயரத்துக்கு தண்ணி எழும்பினதைப் பாக்க முடியாம போய்டுச்சேன்னு வருத்தப்பட்ட செல்வனுக்கு கிடைத்தது நல்ல உதை.
சத்தம் கேட்டு அங்க கூடின செங்கல்சூளை மக்கள் எங்களப் பாத்துரக் கூடாதுனு நாங்க ஓடின வேகத்துல எல்லாப் பாத்திரங்களையும் அங்கேயே போட்டுட்டு வந்துட்டோம் .கணேசன் வீட்டுக்குப் போனா அங்க விதை நெல் சிதறிக் கிடக்குது. அப்படி இப்படி ஒரு சாக்கை தாயார் செய்து நெல்லை அதில் கொட்டியபின், எல்லோருமாக கடை வீதிக்குப் போய் ஆளுக்கொரு சிறிய பொறித்த மீன் வாங்கி சாப்பிட்ட பின்தான் சற்றே ஆசுவாசம் அடைந்தோம்.அதன்பின் பல மாதங்களுக்கு அந்தப் பக்கமே நாங்கள் போவதை மறந்துவிட்டோம்.
இப்பொழுதும் எங்கள் ஐவருக்கும் அரிதாக, ஒன்றாக சமயம் கிடைத்தால் மீன்பிடிப் பொழுதுகளை திட்டமிட மறப்பதில்லை. அப்போது கற்றுக்கொண்ட சமையல் இன்று வரை எனக்குக் கை கொடுக்கிறது. பெங்களூரில் Kairali,Kudla மற்றும் Coconut grove போன்ற இடங்களில் சில சமயம் மீன் சாப்பிட நேர்ந்தாலும் இந்த மீன்பிடிப் பொழுதுகள் மீனின் சுவையை இதுவரை நான் உணர்ந்ததில்லை.

2 comments:

  1. Kalakkal Jai...Because I had roamed around Tharapuram and the mentioned places with you, I am moved by visualising. Vedi podradu konjam puriyala. Nee Bangalore vanda udan, konjam explain pannu, test panni parpom.

    Ganesan, vaikaal orama kalakureenga...

    ReplyDelete
  2. அருமையான பதிவு. + புகைப்படங்கள்.இப்போதுதான் இந்த லிங்க் கிடைத்தது.. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete