Friday, December 25, 2009

ஆம்ஸ்டர்டாம் பயணம் …

வேலைப்பளுவுக்கு மத்தியில் ஏறக்குறைய மறந்தே போன என் புத்தக வாசிப்பை விரிவுபடுத்த, இணையத்தில் எழுத எடுத்து வைக்கும் என் முதல் அடி இது…
வலைத்தள எழுத்துக்களின் மீது என் கவனத்தை திரும்ப வைத்த நண்பர்கள் தியாகு,சில்வர் ,நிவேதா மற்றும் நாகாவின் எழுத்துகளுக்கு என் முதல் நன்றி. முதன் முறையாக ,நான் சென்று வந்த Amsterdam பயணம் பற்றி எழுத நினைக்கிறேன்.
இம்முறை வேலை நிமித்தமாக நான் தங்கி இருந்தது Germany யின் வடக்குப்பகுதியான Bremen. ஆதலால் Netherland மற்றும் Belgium தவிர்த்து வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிப்பது, என் வேலைப்பளுவுக்கு மத்தியில் கடினம்.எனவே Bremenல் இருந்து 275 கிமீ தொலைவே உள்ள Amsterdam சென்று வர முடிவு செய்தேன்.
Amsterdamன் முக்கிய அம்சமான Tulip Garden ஐ குளிர்காலம் ஆதலால் காணமுடியாது என்ற போதிலும், நீண்ட நெடிய வரலாறு உடைய Amsterdamன்சாலைகள்,இரவு வாழ்க்கை ,கால்வாய் படகுப் பயணங்கள் மற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பன் சங்கர் மற்றும் கல்லூரித்தோழி Shahnaz இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு ஆதலால் இப் பயணம் சுவாரசியம் செறிந்ததாக மாறியது.
26-09-09, காலை 06-06 க்கு குளிருக்கு மத்தியில் துவங்கிய என் பயணம், மிதமான வெயிலுக்கு நடுவில் அன்று காலை 11-30 மணியளவில் முடிந்தது. இடையில் மாற்றப்பட்ட பயணவழி காரணமாக 30 நிமிடத் தாமதம் .இதன் காரணமாக இரயில் நிலையத்தில் நண்பன் சங்கரை தவற விட்டுவிட்டேன் (கைப்பேசியின் தவிர்க்கமுடியாத பயன்பாடு அன்று நன்கு புரிந்தது). ஆனால் முன்பே பேசி வைத்திருந்தபடி மதியம் 2.00 மணியளவில் மீண்டும் ஹோட்டலில் சந்தித்துக்கொண்டோம்.
எனது பயண நோக்கமே Amsterdam இன் சுவாரசியம் செறிந்த வரலாறு மற்றும் கலைவாழ்வு பற்றி தெரிந்து கொள்வதற்காக இருந்ததால், என் முதல் இலக்கு, Rembrandt House. 17 ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த Rembrandt, Dutch Golden Age ன் மிக முக்கிய ஓவியர். இவரது The three trees என்கிற கோட்டு ஓவியம் மிகப் பிரபலம். Rambrandt வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்றி அமைத்திருக்கிருகிறார்கள். அவரது அரிய கலைசேமிப்புகள் மற்றும் அவரது படைப்புகள், போக அவரது etching technique, Iconography பற்றிய செயல்முறை விளக்கங்கள் மிகவும் நன்றாக இருந்தது.
அடுத்ததாக நான் சென்றது Von Gogh Museum.இங்கு Von Gogh ன் படைப்புகள் மூன்று தளங்களில் வருட வாரியாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். Post-Impressionism என்கிற கலைப் பிரிவில் இவரது படைப்புகள் பார்க்கப்படுகின்றன. அவரது இறுதிக்கால ஓவியங்கள் தவிர்த்து மற்றவை பெரிதாக ரசிக்கப்படுவதாக தெரியவில்லை. அவரது பெருமைக்கு காரணம் படைப்புகளின் தரம் அல்ல ,அவரது இலக்கணம் மீறிய புதிய பரிமாணம் என்பது நன்கு புரிந்தது. இவரது படைப்புகளை நானும் சங்கரும் ஒருசில புரிதலுடன் பார்த்தோம்.பின்பு இருவரும் அங்கிருந்து Shahnaz வீட்டிற்குச் சென்றோம்.
கல்லூரிப் பெண்ணாகப் பார்த்த Shahnazன் குடும்பப் பாங்கு, நேர்த்தியாக பாராமரிக்கப்படும் அவர்களது அழகான வீட்டில், அவளது கணவனின் அன்பான உபசரிப்பில்,குழந்தை Bilalin அழகான மழலையில் தெரிந்தது. நண்பர்கள், குடும்பம் மற்றும் பொதுவான அளவலாவலுக்குப் பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகான ருசியான உணவுடன் அங்கிருந்து விடை பெற்றோம்.
என் அடுத்த இலக்கு Amsterdam இன் கால்வாய் படகுப் பயணம்.Amsterdam இன் முக்கிய அம்சம் கால்வாய் படகுப் பயணங்கள்.சாலைகளின் வழியே Amsterdamஐ பார்ப்பதும் கால்வாய் வழியே Amsterdam ஐ பார்ப்பதும் இரு வேறு அனுபவங்கள். அதுவும் கால்வாய் வழியே இரவில் நாம் பார்க்கும் Amsterdam அவ்வளவு அழகு.
மிகக் குறுகலான கால்வாய்கள் வழியே, நீர் மட்டத்தில் இருந்து 12 அடி முதல் 15 அடி உயரமே உள்ள 17 ம் நூற்றாண்டின் பாலங்களின் ஊடே பயணம் செய்யும் அனுபவம் மிக அருமை.அதுவும் மிக குறுகலான கால்வாய்களில் படகோட்டி 90 பாகை ஓடிவுகளில் படகை ஆநாயசமாகத் திருப்புவது பயங்கர ஆச்சர்ய அனுபவம்.
இந்தக் கால்வாய்கள் 17 ம் நூற்றாண்டில் Amsterdamல் மக்கள் குடியேற்றத்திற்காக அமைக்கப்பட்டவை.முழுமையடையாத concentric circle வடிவில் அமைக்கப்பட்ட இக்கால்வாய்களில் மூன்று வட்டங்கள் குடியேற்றத்திற்காகவும் நான்காவது நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்புக்காகவும் அமைக்கப்பட்டவை. இந்த கால்வாய்கள் பொதுவாக Grachtengordel என அழைக்கப்படுகின்றன. இக்கால்வாய்களில் பல படகு வீடுகளைப் பார்க்கலாம் . Italian Job போன்ற படங்களில் பார்த்ததைப் போன்ற ஒரு சில ஆடம்பர மதகு வீடுகளை யும் பார்க்கலாம்.
கால்வாய் பயணத்தின் ஊடே Amsterdam ன் மிகச் சிறிய வீடு, சாயும் வீடுகள்,13 ம் நூற்றாண்டின் மிகப் பழைய தேவாலயம்,Anne Frank House, புராதன நாவாய்ப் படகு, “Red light district” ,பாலங்களின் ஒளி அலங்காரம், இவற்றை வழிகாட்டியின் விளக்கத்துடன் பார்த்து மகிழலாம். கூடவே கையில் Amsterdamன் Heineken beerம் இருந்து விட்டால் Amsterdam - மண்ணில் இறங்கி வந்த சொர்க்கம்தான்.
Red light district - Amsterdam என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இதுதான். வருடத்தின் ஓவ்வொரு மாலையும் மிகவும் ஆரவாரத்துடன் காணப்படும் இடம் இது.Amsterdam Central ன் அருகே உள்ள Leidseplein மற்றும் Rembrandtplein போன்ற இடங்கள் இரவு வாழ்க்கைக்கு முக்கியமானவை. இந்த இடங்கள் தான் பொதுவாக Red light district என அழைக்கப்படுகின்றன.
அந்தப் பகுதி முழுக்க குறுகலான சாலைகளின் ஊடே விரவிக் கிடக்கும் Glass houses,Sex shops,Dance bars மற்றும் ethnic restaurantகள் தவிர சுவாரசியமான வேறு பல விசயங்களையும் இங்கு காணலாம். முக்கியமாக இங்கு எந்தவொரு Café யிலும் நம்ம ஊர் கஞ்சா (Hash Browny) கிடைக்கும். Amsterdam ல் இது சட்டப்பூர்வம். புகைமூட்டத்துடன் காணப்படும் இந்த Cafe களுக்குள் சென்று வந்தாலே நமக்கு போதை ஏறலாம். முன் பின் இரவுகளில் முழுக்க கும்பலுடன் காணப்படும் Beer gardenகள் ,மங்கல் பார்வையுடன் நம்மை கடந்து செல்லும் மக்கள், கள் வடியும் பார்வையுடன் வலை விரிக்கும் விலை மாதுகள்..இரவு முழுக்க நிரம்பி வழியும் restaurant கள் dance barகள் என முற்றிலும் புது உலகம் இது. பயணக் களைப்பு காரணமாக இரவு 1.30 மணியளவில் இங்கிருந்து அறைக்குத் திரும்பினேன்.ஆனால் அதிகாலை 5 மணி வரை இங்கு ஆரவாரம் அடங்காதாம்
அடுத்த நாள் காலை Vondal park இல் சிறிது நேரம் உலாவி விட்டு Rijks அருங்காட்சி சாலைக்குச் சென்றேன்.இங்கு பல்லாயிரக்கணக்கான கலைப் பொருட்களை (Dutch art) பார்வைக்கு வைத்துள்ளார்கள். ஓவியப்பிரிவில் Rembrandt மற்றும் அவருடைய மாணாக்கர்களின் ஓவியங்களை பார்வைக்கு வைத்துள்ளார்கள். இங்கு இந்தியாவுடன் Dutch வைத்திருந்த வாணிபத் தொடர்பை விளக்கும் வண்ணம் இடம் பெற்றிருந்த ,மிகப்பெரிய ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது.
அடுத்ததாக நான் சென்றது Anne Frank House. இது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நாஜிக் கொடுமைக்குப் பயந்து தன் குடும்பம் மற்றும் குடும்ப நண்பர்கள் உடன் இரண்டு வருடங்கள் மறைவிடத்தில்( Secret Annexe) வாழ்ந்து பயங்கரவாத முகாமில் (concentration camp) உயிரை விட்ட Anne Frank என்ற யூதப் பதின்பருவப் பெண் வாழ்ந்த வீடு. மறைவிடத்தில் வாழ்ந்த சமயத்தில் அவள் எழுதிய நாட் குறிப்புகள் நவீன உலகின் போருக்கு எதிரான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.13-14 வயதே ஆன பதின்பருவப் பெண்ணின் நாட் குறிப்புகளில் காணப்படும் விசாலமான பார்வை, பல புத்தகங்களை வாசித்துச் சேர்த்த அறிவின் முதிர்ச்சி உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். எல்லாவற்றையும் விட அவள் எழுத்தின் நேர்மை நிச்சயம் நம்மை வெட்கப்பட வைக்கும்.
“The diary of a young girl” என்ற அந்த நாட் குறிப்புகளின் புத்தகவடிவத்தை நீங்கள் படித்திருந்தால் இந்த வீட்டின் ஒவ்வொரு அறையும் உங்களுக்கு ஓராயிரம் கதை சொல்லும். ஒவ்வொரு அறையிலும் இது சம்பந்தப்பட்ட ஒரு சிலரின் பேட்டியுடன் ஒளி பரப்பப்படும் குறும்படங்கள் மிகக் கூர்மையானவை. முக்கியமாக Anne Frank ன் தந்தை Otto frank ன் பேட்டி.
இங்கு வந்து செல்லும் அனைவரின் கண்களும் விழி நீரால் திரை இடத் தயங்குவது இல்லை. சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் இந்த உலகுக்கு போருக்குப் எதிராக அனுப்பப்படும் ஓராயிரம் செய்திகளாக எனக்குத் தோன்றியது. மேற்சொன்ன கருத்தின் ஆங்கில வரி வடிவத்தை அங்கிருந்த குறிப்பேட்டில் பதிவு செய்து வைத்துவிட்டு கனத்த மனத்துடன் அங்கிருந்து அகன்றேன்
இவைபோக Amsterdam Centralன் அருகிலேயே National Monument, Royal palace மற்றும் Madame tussaud museum போன்ற இடங்களை பார்க்கலாம். மேலும் வைரம் குறித்த விபரங்களில் நமக்கு ஆர்வம் இருந்தால் Amsterdamல் Haasan போன்ற வைர விற்பன்னர்களின் தொழிற்சாலையில் வைரம் (Number of faces,cutting angle,cutting technique,Grade,cost,etc..) குறித்த பல விபரங்களை நேரடியாக செயல்முறை விளக்கத்துடன் பார்க்கலாம்.
Amsterdamன் பல வேறுபட்ட பழக்க வழக்கங்களுக்கு/மக்களுக்கு மத்தியில் நான் இங்கு ஒரு சில பொதுவான அம்சங்களையும் பார்த்தேன். அவற்றில் ஒன்று Amsterdamன் எல்லா வீடுகளின் முகப்பு உச்சியிலும் காணப்படும் ,வீட்டுப் பொருட்களை மேலேற்ற உபயோகப்படுத்தும் ஒரு சட்டம். வீடுகளின் குறுகலான படிகளில் வழியே உள்ளே கொண்டு செல்லமுடியாத பொருட்களை இதன் மேலும் மேலேற்றி சன்னல் கதவுகள் மூலமாக உள்ளே எடுப்பதற்காக இந்த அமைப்பு.13 ம் நூற்றாண்டின் பழைய வீடுகள் துவங்கி இன்றை வீடுகள் வரை இந்த ஒற்றுமையைப் பார்க்கலாம்.
அடுத்த பொதுவான அம்சம் மிதிவண்டிகள். எங்கு பார்த்தாலும் மிதிவண்டிகள் மற்றும் மிதிவண்டிகள்தான். இதற்கு Amsterdam central முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான மூன்றடுக்கு மிதிவண்டி நிறுத்துமிடமே சாட்சி. இரு தினங்களே Amsterdamல் சுற்ற முடிந்தாலும் ஏற்கனவே தெரிவு செய்து வைத்திருந்த அனைத்து இடங்களையும் பார்த்த திருப்தியுடன் Bremen திரும்பினேன்.
Amsterdam பயணத்திற்கு ஒருசில உபயோகமான குறிப்புகளோடு இப்பயணக் குறிப்பை !! நிறைவு செய்கிறேன்.
1.வருடத்தின் எந்த ஒரு நாளும் நிச்சயமற்ற வானிலை நிலவக்கூடிய இடம் இது. 60 சதவிகிதத்திற்கும் அதிகமான நாட்கள் மழை பொழியக் கூடும் ஆகவே தேவையான முன்னேற்பாடுகளோடு போவது நலம்.(அதிசயமாக என் இருதினப் பயணத்தில் நல்ல வானிலை இருந்தது.)
2. உங்கள் பயண நோக்கம், ஓரிரு நாட்கள் நகரின் முக்கிய இடங்களைப் (Museums,parks,canal cruise and red light district) பார்ப்பதாக மட்டுமே இருந்தால் I Amsterdam card வாங்கி முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை நாம் பல Museum களில் நுழைவுச்சீட்டாகவும் , உள்ளூர் போக்குவரத்து வசதிக்காகவும், பயன்படுத்திக் கொள்ளலாம்.