Sunday, April 4, 2010

மனிதம் கற்போம் பூனையிடம்

அன்று ஒரு விடுப்பு நாளின் காலைப்பொழுது. நான் வீட்டின் பின்புறம் அமர்ந்து இருந்தேன்.என் முன்னே பூனை ஒன்று அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. எலும்பும் தோலுமாய் இருந்த அதற்கு என் வீட்டார் உணவு அளித்துக் கொண்டிருந்தார்கள். அன்று முழுவதும் அதனை நான் கவனித்துக் கொண்டிருந்தேன் .பூனை என்றால் அத்தனைப் பிரியமில்லாத என் வீட்டாரும் பக்கத்து வீட்டாரும் அதற்கு ராஜ உபசாரம் செய்து கொண்டிருந்தார்கள்.


எனக்கோ ஆச்சரியம், நேரே என் அம்மாவிடம் சென்று என் ஆச்சரியத்தை தெரிவித்தேன்.அம்மா எனக்கு சொன்ன பதிலில் என் ஆச்சரியம் பல மடங்கு கூடியது கூடவே சில வினாக்களும் தொற்றிக்கொண்டன. வினாக்கள் பதிவின் இறுதியில்...


எனக்குத் தொற்றிக் கொண்ட ஆச்சரியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

எங்கள் வீட்டின் அருகில் ஓலை வேய்ந்த குடிலில் வசித்துக் கொண்டிருந்த அந்த ஏழைப் பெண்ணுக்கு இரு குழந்தைகள். அவர்களுடன் எங்கிருந்தோ வந்து சேர்ந்த அந்தப் பூனைதான் குழந்தைகள் இருவருக்கு விளையாட்டுத் தோழன். குழந்தைகளுடன் விளயாடிய நேரம் போக வீட்டைச் சுற்றி அலைந்து கொண்டு சிறு பூச்சிகளை பிடித்துத் தன் பசியைப் போக்கிக் கொள்ளும் இந்தப் பூனை.
கிராமங்களில் நீங்கள் கவனித்திருக்கலாம், பூனை நாய் போன்ற பிராணிகள் வீட்டின் ஒரு உறுப்பினராகவே வளைய வருவதை.இந்த பூனை அக்கம் பக்கம் வீட்டில் எல்லாம் போய் விளையாடும் . காடு மேடு எதுவும் பார்க்காமல் தாவிக் குதித்து ஓடிக் கொண்டே இருக்கும்.
அந்தப் பெண்ணின் வீட்டின் அருகிலேயே ஒரு பொட்டல் கிணறு,பலகாலம் பயன்படுத்தாமல் நீர் வற்றிப் போய் பாழடைந்து கிடந்தது. சலங்கை ஒலி கமல் போல தன்னை நினைத்திருந்த இந்தப் பூனையோ தினமும் அந்தக் கிணற்றின் மேலேறி நடனமாடும். பூனையின் ஒரு போறாத நாளில் கிணற்றின் மேலிருந்து தவறி உள்ளே விழுந்து விட்டது. முப்பது நாற்பது விட்டது அடி ஆழமான அந்தக் கிணற்றிலிருந்து அதனால் மேலேற முடியவில்லை.
திடீரென பூனையை எங்கும் காணாது தேடிய அந்தப் பெண், ஒரு நாள் கழிந்து தற்செயலாக கிணற்றுக்குள் எட்டிப் பார்க்க ,உள்ளே பூனையைக் கண்டாள். கிணற்றில் நீர் சேந்தும் வாளியை கயிற்றில் கட்டிப் பூனையை வெளியே எடுக்க பலபாடு பட்டாள். வாளியில் ஏறினாலும் கயிற்றின் ஆட்டத்தில் பயந்து எல்லா முறையும் வாளியிலிருந்து கிணற்றுக்குள் குதித்து விட்டது பூனை.
நீர் இல்லாத கிணறாதலால் அடியும் பட்டிருந்தது பூனைக்கு. பூனையை வெளியே எடுக்க முடியாது என்ன செய்வது என தவித்த அந்தப் பெண், தினமும் தன்னால் முடிந்த ஏதாவது உணவுப் பொருளை கிணற்றுக்குள் எறிந்து கொண்டே இருந்தாள். இப்படியே மூன்று மாத காலம் ஓடி விட்டது.
ஆனால் ஓடியாடி விளையாட முடியாததால்,மெலிந்து கொண்டே போனது பூனை. அந்தப் பெண்ணும் சலிக்காமல் உணவை எறிந்து கொண்டே இருந்தாள் இடையிடையே வாளியை இறக்கி பூனையை மேலே கொண்டு வர முயன்று கொண்டே இருந்தாள். எல்லா முறையும் தோல்விதான்.வாளியிலிருந்து மேல் நோக்கிப் பார்த்தால் ஆடிக் கொண்டிருக்கும் கயிற்றை பாம்பென நினைத்தே பலமுறை பயந்திருக்கிறது அந்தப் பூனை.
இதற்கிடையில் மழை நாள் ஒன்றில் கிணற்றைச் சுற்றி மேய்ந்து கொண்டிருந்த கோழி ஒன்று கிணற்றுக்குள் தவறிப் போய் விழுந்து விட்டது. கிணற்றில் கோழி விழுந்ததைப் பார்த்த சிலர்,மூன்று மாத காலமாக சரியான உணவில்லாமல் கிணற்றுக்குள் இருக்கும் பூனை எப்படியும் கோழியைப் பிடித்துத் தின்று விடுமெனக் கருதி கோழியை மறந்துவிட்டனர்.
இரு தினங்கள் கழிந்து எதேச்சையாக கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த அந்தப் பெண்மணி, கோழி உயிருடன் இருப்பதைப் பார்த்து வியப்பின் உச்சிக்கே போய் விட்டாள்.உயிர் பயம் என்னவென உணர்ந்திருந்த பூனை " கோழி உயிரையும் தம் உயிர் போல்” எண்ணி தனக்கு அளித்த உணவிலிருந்து கோழியை உண்ண அனுமதித்து உயிருடன் விட்டிருந்தது.
பூனையும் நாயும் நண்பர்கள்/ பூனைக்கு பால் கொடுக்கும் நாய், என புகைப்படத்துடன் செய்திகளை நானும் படித்திருக்கிறேன்.ஆனால் ஒரு நல்ல பாதுகாப்பான /உணவுக்கு உத்திரவாதம் உள்ள, மனிதர்களின் கண்காணிப்புடன் கூடிய ஒரு சூழ்நிலையில் இது ஓரளவிற்கு சாத்தியம்தான். ஆனால் தனிமையில், மூன்று மாதகால,மனநிலை பிறழகக்கூடிய ,கட்டுப்பாடற்ற ஒரு சூழ்நிலையில் பூனை இப்படி மனிதத்துடன் நடந்து கொள்வது 1௦௦ %அதிசயம் தான்.
ஒருசில அவசர கணங்களில், ஒரு நேர உணவை நாம் தவற விட நேர்ந்தாலே ஏதாவது கோழியைப் பார்த்தால் அது நமக்கு கோழியாகத் தெரியாது, 'சிக்கன் 65 ' ஆகவோ ‘கிரில் சிக்கனாகவோதான்’ தெரியும். பசியால் மனிதனை மனிதனே அடித்துப் புசித்த கதைகளைப் படித்திருந்த எனக்கு அந்தப் பூனையின் மன நிலை, ஒரு முற்றும் துறந்த முனிவனின் மனநிலையோடும், வள்ளலாரின் ஒப்பற்ற காருணியத்தோடும் ஒப்பிடத் தோன்றியது .மனிதன் மறந்த மனிதத்தின் உயர் நிலை அது.
அடுத்த இரு நாட்களில் மீண்டும் ஒருமுறை வாளியை இறக்கியதில் கோழி அதி லேறி மேலே வந்து விட்டது. ஆனால் பூனை பயந்து கொண்டே இருந்தது.
பூனை கிணற்றில் விழுந்து ஆறு மாதம் ஆனபிறகு ஒரு நாள் திடீரென அந்தப் பெண்ணுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி ஒரு கருவாட் டைத் தீயில் இட்டு நன்றாகச் சுட்டு வாளியினுள் வைத்து கிணற்றுக்குள் அனுப்பினாள். கருவாட்டின் வாசனையால், வாளிக்குள் தாவிய பூனை உடனே அதை சாப்பிடத் துவங்கியது.. பூனை உணவில் கருத்தாக இருந்த நேரத்தில் வாளியை கிணற்றில் இருந்து மேலே ஏற்றிவிட்டாள்.ஆறு மாத காலத்திற்குப் பிறகான சிறை வாசத்திற்குப் பிறகு மண்ணைத் தொட்டது பூனை.
பதிவின் முதலில் குறிப்பிட்டிருந்த வினாக்கள் இங்கே,

1. மனிதத்தை இந்தப் பூனையிடம் இருந்து கற்றுக் கொள்ள நாம் தயாரா?
2. நடைமுறை வாழ்வியலில் நம் மனிதம் தேய்த்து விட்டதா ?
3. பிரதிபலன் பாராத அந்த ஏழைப் பெண்ணின் பொறுமை/மனநிலை நமக்கும் வாய்க்குமா ?